search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீட்டு நிறுவனம்"

    மோசடி சீட்டு நிறுவனங்களை ஒடுக்கும் மசோதா, பாராளுமன்ற மக்களவையில் நிறைவேறியது. #LokSabha #ChitFundAct
    புதுடெல்லி:

    சீட்டு நிறுவனம் நடத்தி மோசடி செய்கிறவர்களை, நிதி மோசடியாளர்களை பிடித்து கடுமையான தண்டனையும், கடும் அபராதமும் விதிக்க மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு முடிவு செய்தது.

    இதுதொடர்பாக கட்டுப்பாடற்ற டெபாசிட் திட்டங்களை தடை செய்யும் மசோதா ஒன்றை தயாரித்தது.

    இந்த மசோதா கடந்த செவ்வாய்க்கிழமையன்று மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் மீது நேற்று சிறிய அளவில் விவாதம் நடந்தது.

    விவாதத்தின்போது, மேற்கு வங்காளத்தில் ஆட்சி செய்து வருகிற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் பேசினர்.

    காங்கிரஸ் எம்.பி. ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, “மேற்கு வங்காளத்தில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ், மக்களின் பணத்தை கொள்ளையடித்துள்ளது. லட்சக்கணக்கான மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த பணம் திருப்பித்தரப்பட வேண்டும்” என கோரினார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.பி. முகமது சலீம் பேசும்போது, “ ஊழல் காரணமாகத்தான் திரிணாமுல் காங்கிரஸ் (அதிகாரத்துக்கு) வந்துள்ளது. அதன் சில உறுப்பினர்கள் சிறைக்கு போக வேண்டும்” என கூறினார்.

    அப்போது பா.ஜனதா எம்.பி.க்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தார்கள்.

    முகமது சலீம் பேச்சு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.

    விவாதத்துக்கு நிதி மந்திரி பியூஸ் கோயல் பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    உரிய அங்கீகாரமின்றி டெபாசிட்டுகளை பெற்றது தொடர்பாக 978 சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றில் மேற்கு வங்காளத்தில் மட்டும் 326 சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

    இத்தகைய அங்கீகாரமற்ற டெபாசிட்டுகளை பெறுவதை முடிவுக்கு கொண்டு வர அரசு விரும்பி உடனே செயல்பட்டது. இந்த மசோதாவில் ஓட்டைகள் இல்லை என்பதை உறுதி செய்தோம்.

    இந்த மசோதா, சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் சொத்துக்களை ஜப்தி செய்து, அவற்றை விற்று டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை திரும்ப அளிக்க வகை செய்கிறது.

    சட்டத்தை தவறாக பயன்படுத்தாதபடிக்கு பாதுகாப்பு அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிதி மந்திரி பியூஸ் கோயலின் பதில் உரையைத் தொடர்ந்து மசோதா, குரல் ஓட்டு மூலம் நிறைவேறியது.
    ×